பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய புதுச்சேரி நர்ஸ்

கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தடுப்பூசி போட்டதே தெரியவில்லை என்று நர்ஸ் நிவேதாவிடம் தெரிவித்தார்.

Update: 2021-03-01 08:58 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி இன்று நாடுமுழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் தகுதி உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். 

பிரதமர் மோடிக்கு புதுச்சேரியைச் சேர்ந்த நர்ஸ் நிவேதா தடுப்பூசி செலுத்தினார். கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் ரோசம்மா அவருக்கு உதவி செய்தார். பிரதமர் மோடிக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.



 


இதுதொடர்பாக தடுப்பூசியை செலுத்திய நர்ஸ்  நிவேதா அந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “புதுச்சேரி தான் எனது பூர்வீகம். நான் எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். நான் தற்போது தடுப்பூசி பிரிவில் பணியாற்றுகிறேன். இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகிறார் என்று இன்று காலை தான் எனக்கு தெரியும். பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தும்போது அவர் ‘‘ஊசியை செலுத்துங்கள்’’ என்றார். அப்போது ‘‘தடுப்பூசி போட்டப்பட்டு விட்டது’’ என்றேன். அதற்கு அவர் ‘‘அப்படியா, தடுப்பூசி போட்டதே தெரியவில்லையே’’ என்றார். பின்னர் நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று பிரதமர் என்னிடம் கேட்டார். பிரதமருக்கு 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகள்