பிரேசில் செயற்கைகோளை செலுத்தியதில் இந்தியாவுக்கும், இஸ்ரோவுக்கும் பெருமை கே.சிவன் பெருமிதம்
பிரேசில் நாட்டின் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியதில் இந்தியாவும், இஸ்ரோவும் பெருமைப்படுவதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.;
ஸ்ரீஹரிகோட்டா,
பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, செயற்கைகோள்களை திட்டமிட்ட இலக்குகளில் நிலைநிறுத்திய உடன், விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசியதாவது:-
பிரேசில் நாட்டில் உள்ள தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் முதன்முதலில் வடிவமைத்த அமசோனியா-1 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியதில் இந்தியாவும், இஸ்ரோவும் மிகவும் பெருமை அடைகின்றன. இந்த சாதனையை நிகழ்த்துவதற்காக ஒருங்கிணைந்து செயல்பட்ட பிரேசில் நாட்டு குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இஸ்ரோவை பொறுத்தவரையில் நடப்பாண்டு 7 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. அதில் 6 செயற்கைகோள் திட்டங்களும், ஒரு ஆள் இல்லாத ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டமும் அடக்கம். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆள் இல்லாத ராக்கெட், இந்த ஆண்டு இறுதியில் ஏவப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்ற பிரேசில் நாட்டு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறை மந்திரி மார்கோஸ் சீசர் போன்டஸ் பேசியதாவது:-
பிரேசில் நாட்டைச் சேர்ந்த அமசோனியா-1 என்ற செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரேசில் சார்பில் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். அமசோனியா-1 செயற்கைகோள் திட்டம், பிரேசில் நாட்டுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக, அமேசான் காடுகள் அழிப்பை தடுக்கவும், மேம்படுத்துவதற்கும் இந்த செயற்கைகோள் உதவும். இதன் மூலம் செயற்கைகோள் மேம்பாட்டில் பிரேசில் ஒரு சகாப்தத்தின் தொடக்கத்தை உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள் ஏவுதல் மூலம், இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான கூட்டுறவும் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.