மராட்டியத்தில் இரும்பு ஆலையில் விபத்து - 38 தொழிலாளர்கள் படுகாயம்
மராட்டிய மாநிலத்தில் இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 38 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.;
வார்தா,
மராட்டிய மாநிலம் வார்தா நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள புகாவ் என்ற கிராமத்தில் பிரபல உத்தம் மெட்டாலிக்ஸ் என்ற இரும்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று தொழிலாளிகள் பணியில் இருந்த போது கொதிகலனில் இருந்து வெப்ப காற்றுடன் கூடிய நிலக்கரி துகள்கள் கசிவு ஏற்பட்டது.
இது வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளிகள் மீது பட்டதால் 38 பேர் தீக்காயமடைந்தனர். இதில் அவர்களது உடல் வெந்தது. உடனடியாக தொழிலாளர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக நாக்பூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது பற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் விவேக் பிமன்வார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.