எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் 3-ஆம் நாளான இன்று மாநிலங்களவை கூடியதும், மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து மாநிலங்களவையில் நாளை விவாதிக்கப்படும் என்று வெங்கைய நாயுடு அறிவித்தார். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள், அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், மீண்டும் அவைக்குள் வந்து முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இதனால், மாநிலங்களவையை இன்று காலை 10.30 மணி வரை ஒத்திவைப்பதாக வெங்கைய நாயுடு அறிவித்தார். பின்னர் மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டது. உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.