இஸ்ரோ தொலைநோக்கு திட்டத்தை வகுக்க வேண்டும் - மாதவன் நாயர்
இஸ்ரோ தொலைநோக்கு திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அதன் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறினார்.
பெங்களூரு,
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) முன்னாள் தலைவர் மாதவன் நாயக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சீனாவில் உள்ளது போல் விண்வெளி மற்றும் வான்வழி துறைகளை மிக நெருக்கமாக கொண்டு வர வேண்டியது அவசியம். இதன் மூலம் விண்வெளி திட்டங்கள் பெரிய அளவில் வெற்றி பெற முடியும். இதற்காக 10 ஆண்டுகளை உள்ளடக்கிய ஒரு தொலைநோக்கு திட்டத்தை இஸ்ரோ வகுக்க வேண்டும். இத்தகைய தொலைநோக்கு திட்டத்தை வகுக்காத வரையில் நாம் சிறிய அளவிலான திட்டங்களை மட்டுமே உருவாக்குவோம். ஆம், நம்மிடம் ஆலோசனைகள் உள்ளன.
ஆனால் அதை சிலர் ஒருங்கிணைத்து அடுத்த 10 ஆண்டுகள் திட்டத்திற்காக ஒரு திடமான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியம். விண்வெளித்துறையில் உள்ள தனியார் நிறுவனங்கள் தங்களின் வணிகத்தை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும். உள்ளூர் அளவில் மட்டுமே அந்த நிறுவனங்கள் வணிகத்தை மேற்கொண்டால் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியாது. இஸ்ரோ தன்னிடம் பூமி கண்காணிப்பு, தகவல் தொடர்பு மற்றும் செயற்கைகோள் தொழில்நுட்பங்களை வைத்துள்ளது.
அந்த தொழில்நுட்பங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் நமது உள்நாட்டு தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்தால், அந்த நிறுவனங்கள் தங்களை நிறுத்திக்கொள்ள முடியாது. அந்த நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளை கைப்பற்ற வேண்டும். அப்போது தான் அவர்களின் முயற்சிக்கு ஒரு அர்த்தம் இருக்கும். 300 பில்லியன் அமெரிக்க டாலர், உலகம் முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது.
அதனால் தனியார் நிறுவனங்கள் உள்ளே வரும்போது, அவைகள் தொழில்நுட்பங்களை கண்காணிக்க வேண்டும், பெரிய அளவில் உற்பத்தி செய்ய வேண்டும், அவற்றை பொருளாதார ரீதியாக அனைத்து பகுதிகளுக்கும் விற்பனை செய்ய வேண்டும். விண்வெளித்துறையில் தனியாரை மத்திய அரசு அனுமதித்துள்ளது. மத்திய அரசின் இந்த கொள்கை மூலம், இதன் மூலம் இஸ்ரோவில் ஒற்றை நிர்வாக ஆணையம் மற்றும் கட்டுப்பாடு கிட்டத்தட்ட சென்றுவிடும். அதன் நிர்வாக அமைப்பு மாறும்.
சீனாவில் விண்வெளி மற்றும் வான்வழி ஆகிய துறைகள் ஒரே தலைமையின் கீழ் செயல்படுகிறது. இதன் மூலம் அவர்களால் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க முடிகிறது. இதனால் அங்கு வேகமான முன்னேற்றம் காணப்படுகிறது. மஸ்க் நிறுவனத்தில் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கிடைக்கிறது. இதனால் மற்ற நிறுவனங்களை விட அந்த நிறுவனம் வேகமாக முன்னேற்றத்தை கண்டு வருகிறது. அமெரிக்காவின் நாசா கூட இத்தகைய கட்டமைப்பை தான் கடந்த 2000-ம் ஆண்டு வரை கொண்டிருந்தது. அதன் பிறகு இந்தியாவை போல் சில கொள்கை ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான குழப்பங்கள் அங்கு நடந்தன.
இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை அந்த இலன் மஸ்க் என்பவர் பயன்படுத்திக் கொண்டு நாசாவுக்கு இணையாக ஒரு நிறுவனத்தை வளர்த்தார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். நாசா வழியில் தான் இஸ்ரோ செல்கிறது என்று கூறி எனது இஸ்ரோ நண்பர்களுக்கு ஏமாற்றத்திற்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை. ஆனால் நாசாவை போல் இஸ்ரோவில் தற்போது உள்ள பிளவுபட்ட அதாவது பல்வேறு நிர்வாக முறைகளுக்கு நாம் முடிவுகட்ட வேண்டியது அவசியம்.
தற்போது இஸ்ரோவில் 3, 4 நிர்வாகங்கள் செயல்படுகின்றன. இதற்கு மாறாக ஒற்றை நிர்வாக முறை இருக்க வேண்டும். ஏனென்றால் பல நிர்வாகங்கள் இருந்தால் சுதந்திரமாக செயல்பட முடியாது. அனைவரும் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும். அதனால் தனித்தனியாக செயல்படும் நிர்வாகங்களை, ஒற்றை நிறுவனம் மூலம் ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம் என்று மாதவன் நாயர் கூறினார்.