விவசாயிகள் போராட்டத்தை தோற்கடிக்க மத்திய அரசு தந்திரம்: விவசாய சங்கம் குற்றச்சாட்டு

விவசாயிகள் நடத்துகிற போராட்டத்தை தோற்கடிக்க மத்திய அரசு தந்திரங்களை செய்வதாக விவசாய சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

Update: 2020-12-20 23:11 GMT
சண்டிகார், 

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் வட மாநில விவசாயிகள் நடத்துகிற போராட்டம், வாட்டும் குளிரிலும் தொடர்கிறது.

ஆனால் இந்த போராட்டத்தை தோற்கடிப்பதுதான் மத்திய அரசின் நோக்கம், இதற்காக அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்துகிறது என போராட்டம் நடத்தும் பாரதீய கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) குற்றம்சாட்டுகிறது.

இதுபற்றி அந்த அமைப்பின் தலைவர் ஜோகிந்தர் உக்ரஹானும், பொதுச்செயலாளர் சுக்தேவ் சிங்கும் நேற்று கூறியதாவது:-

வெளிநாட்டு நன்கொடைகளை அனுமதிக்கிற பதிவு விவரங்களை சமர்ப்பிக்குமாறு வங்கி மூலம் மத்திய அரசு கேட்டிருக்கிறது. மத்திய அரசின்கீழ் இயங்குகிற துறை, இதற்கான இ-மெயிலை பஞ்சாப்பில் உள்ள எங்கள் வங்கி கிளைக்கு அனுப்பி உள்ளது. அன்னிய செலாவணி துறையால் அனுப்பப்பட்ட இ-மெயிலை வங்கி மேலாளர் எங்களுக்கு காட்டினார்.

நாங்கள் நடத்துகிற போராட்டம், மத்திய அரசுக்கு எதிரானது. எனவே அவர்கள் தங்களால் இயன்ற அனைத்து தடைகளையும் உருவாக்க முயற்சிப்பார்கள். வருமான வரித்துறையினர் முதலில் கமிஷன் ஏஜெண்டுகளிடம் சோதனை நடத்தினர். காரணம், அவர்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். எங்கள் அமைப்பு பெரிய அமைப்பு என்பதால் இப்போது எங்களை மத்திய அரசு குறிவைக்கிறது.

அவர்கள் வெளிநாட்டு நிதி பற்றிய விவரங்களை கேட்கிறார்கள். வெளிநாடு வாழ் பஞ்சாபியர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொண்டு எங்களுக்கு உதவுகிறார்கள். அவர்கள் எங்கள் போராட்டத்தை ஆதரிக்கிறார் கள். ஆனால் மத்திய அரசு இந்த போராட்டத்தை தோற்கடிக்க எங்களை குறி வைக்கிறது என்று அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்