டெல்லி குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி
டெல்லியில் உள்ள சீக்கியக் கோவிலான ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு பிரதமர் மோடி முன்னறிவிப்பு ஏதுமின்றி இன்று காலை திடீரென்று சென்று வழிபாடு செய்தார்.
புதுடெல்லி,
சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் தங்களுக்கு எதிரானவை என கருதி அவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் விவசாய சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை விவரிக்கும் கிராபிக்ஸ் மற்றும் தகவல்கள் அடங்கிய இ-புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதை நமோஆப் தன்னார்வ தொகுதியின் உங்கள் குரல் மற்றும் பதிவிறக்கங்கள் பிரிவுகளில் காணலாம். அவற்றை படித்து, பரந்த அளவில் பகிருங்கள் என பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார்.
இன்று காலை ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு பிரதமர் வருகை தந்தது டெல்லி மக்களை வியப்பில் ஆழ்த்தியது. குரு தேஜ் பகதூர் சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவாக இருந்தார். அவரது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
பிரதமர் மோடி ஆரஞ்சுத் துணியால் தலையை மறைத்து பிரகாசமான மஞ்சள் குர்தாவுடன் இடுப்பு கோட் அணிந்து சீக்கிய முறைப்படி குரு தேஜ் பகதூரை வழிபட்டார். பின்னர் சீக்கிய மதகுருக்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். குருத்வாராவிலிருந்து வெளியே வந்தபோது சீக்கிய பக்தர்கள் பிரதமருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
இதற்காக காவல்துறை பாதுகாப்பு அல்லது போக்குவரத்து தடைகள் ஏற்படுத்தி டெல்லி மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது
இன்று காலை வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாரா ரகப் கஞ்ச் சாகிப்பிற்குச் சென்று பிரார்த்தனை செய்தேன். அங்கு தான் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் புனித உடல் தகனம் செய்யப்பட்டது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டேன். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களைப் போலவே, நானும் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் தயவால் ஆழமாக ஈர்க்கப்பட்டேன்.
ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் 400-வது பிரகாஷ் பர்வின் சிறப்பு நிகழ்வை நமது அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொண்டாடக் கிடைத்துள்ள வாய்ப்பு அவரது சிறப்புமிக்க கருணையே ஆகும். நமக்கு இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வரலாற்றுரீதியான சந்தர்ப்பத்தில் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் கொள்கைகளைக் அனைவரும் கொண்டாடுவோம்' என பதிவிட்டுள்ளார்.
Some more glimpses from Gurudwara Rakab Ganj Sahib. pic.twitter.com/ihCbx57RXD
— Narendra Modi (@narendramodi) December 20, 2020