டெல்லி போராட்டம்: சிங்கு எல்லையில் வாலிபால் விளையாடி மகிழ்ந்த விவசாயிகள்

டெல்லி சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிலர் வலை அமைத்து வாலிபால் விளையாடி மகிழ்ந்தனர்.

Update: 2020-12-19 17:37 GMT
புதுடெல்லி,

விவசாயிகளின் நலன்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்பில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கடந்த நவம்பர் 26ந்தேதி, டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டம் 3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.  அரசுடனான பலசுற்று பேச்சுவார்த்தை பலனற்று போனது.  இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு முறை போன்றவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதிமொழிகளை வழங்கியுள்ளது.

எனினும், அவற்றை ஏற்க மறுத்து விவசாயிகளின் போராட்டம் இன்று 24வது நாளை எட்டியுள்ளது.  இந்த நிலையில், டெல்லி மற்றும் அரியானா எல்லையான சிங்கு எல்லை பகுதியில் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களை ஓரத்தில் நிறுத்தி விட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் சிலர் வலை அமைத்து வாலிபால் விளையாடினர்.

இதுபற்றி பஞ்சாப்பின் ஜலந்தர் நகரை சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவர் கூறும்பொழுது, லங்கார் சேவை பணிகளை முடித்து விட்டு வந்துள்ளோம்.  அதனால் நாங்கள் வாலிபால் விளையாடி மகிழ்கிறோம் என்று கூறியுள்ளார்.  லங்கார் எனப்படுவது பொது கேண்டீன் போல் செயல்படும்.  இதில், சீக்கிய நடைமுறை பின்பற்றப்படும்.  இதன்படி, பார்வையாளர்களாக வரும் அனைவருக்கும் சம அடிப்படையில் இலவச சைவ உணவு வழங்கப்படும்.

மேலும் செய்திகள்