லடாக் எல்லையில் படைகளை விலக்கிக்கொள்ள விரைவில் தளபதிகள் பேச்சுவார்த்தை- இந்தியா, சீனா முடிவு
லடாக் எல்லையில் படைகளை முழுமையாக விலக்கிக்கொள்வதற்கு விரைவில் தளபதிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும் என்று இந்தியா, சீனா இடையேயான காணொலி காட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
புதுடெல்லி:
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த மே மாதத்தில் இருந்து 7 மாத காலமாக கிழக்கு லடாக்கில் எல்.ஏ.சி. என அழைக்கப்படுகிற உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறல்களுக்கு இந்தியா தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தது.
இதையடுத்து இரு தரப்பிலும் தலா 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துருப்புகளும், தளவாடங்களும் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு போர் பதற்றம் தொடர்கதையாய் நீளுகிறது.
இந்த பதற்றத்தை தணிப்பதற்காகவும், அமைதியை நிலைநிறுத்துவதற்காகவும் இரு தரப்பு ராணுவ மட்டத்தில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
இந்த நிலையில், இந்திய சீன எல்லை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான பணி செயல்முறை கட்டமைப்பின்கீழ் இரு தரப்பு பேச்சுவார்த்தை, காணொலி காட்சி கூட்டத்தின் வழியாக நேற்று நடந்தது.
இதில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணைச்செயலாளர் (கிழக்காசியா) மற்றும் சீனா தரப்பில் அதன் வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சார் விவகார துறையின் தலைமை இயக்குனர் தலைமையிலான குழுக்கள் கலந்து கொண்டன.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* செப்டம்பர் 30-ந் தேதி கடைசியாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவி வருகிற முன்னேற்றங்கள் குறித்து இரு தரப்பும் ஆய்வு செய்தனர்.
* மூத்த தலைவர்கள்வழங்கிய வழிகாட்டுதல் அடிப்படையிலும், இரு தரப்பு வெளியுறவு மந்திரிகள் மற்றும் சிறப்பு பிரதிநிதிகள் இடையே எட்டப்பட்ட உடன்படிக்கை அடிப்படையிலும் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டின் மேற்கு செக்டாரில் அனைத்து மோதல் புள்ளிகளிலும், படைகளை முற்றிலுமாக விலக்கிக்கொள்வதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து பணியாற்ற இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
* அக்டோபர் 12 மற்றும் நவம்பர் 6 ஆகிய நாட்களில் நடைபெற்ற மூத்த தளபதிகள் மட்டத்திலான 7 மற்றும் 8-வது சுற்று பேச்சுவார்த்தைகளின்போது, நடத்தப்பட்ட ஆழமான விவாதங்கள் களத்தில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த உதவி உள்ளன என்று இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.