திருவனந்தபுரம் அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; வளர்ப்பு நாய்க்கும் விஷம் கொடுத்தனர்

திருவனந்தபுரம் அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.;

Update: 2020-12-18 21:22 GMT
திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை ேசர்ந்த 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திருவனந்தபுரம் அருகே சிறையின் கீழ் சிவகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் சுபி (வயது 51). இவருடைய மனைவி தீபகுமாரி (41). இவர்களுக்கு அகில் (17) என்ற மகனும், ஹரிபிரியா (14) என்ற மகளும் இருந்தனர். அகில் 12-ம் வகுப்பும், ஹரிபிரியா 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

சுபி வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வேலை இழந்ததால் அவர் சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பின்பு, காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இதில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை எனத்தெரிகிறது. எனவே குடும்ப செலவை எதிர்கொள்ள பலரிடம் கடன் வாங்கியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் இவர்களுடைய வீடு உள்பக்கமாக பூட்டிய நிலையில் இருந்தது. வீட்டு முற்றத்தில் கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாய் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டினர். ஆனால், உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சிறையின்கீழ் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, படுக்கை அறையில் 4 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். தொடர்ந்து போலீசார் அறையை சோதனையிட்ட போது ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், கடன் தொல்லை காரணமாக தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், வளர்ப்பு நாயையும் தங்களுடன் அழைத்து செல்வதாகவும் எழுதப்பட்டிருந்தது. இதனால் வளர்ப்பு நாய்க்கும் அவர்கள் விஷம் குடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் அந்த நாய் சிகிச்சைக்கு பிறகு நன்றாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து 4 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிறையின்கீழ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து சிறையின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்