சி.எம்.எஸ்.-01 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் வட்டபாதையில் நிலைநிறுத்தம்: இஸ்ரோ தலைவர் மகிழ்ச்சி
விண்ணில் செலுத்திய சி.எம்.எஸ்.-01 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் வரையறுக்கப்பட்ட வட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது என இஸ்ரோ தலைவர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா,
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆனது, 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.-01 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள், இன்று மாலை வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.
பூமி கண்காணிப்பு பணிக்காக உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுடன், இந்திய பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபர், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நீட்டிக்கப்பட்ட-சி பேண்ட் சேவைகளை வழங்குவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது.
44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளன. இது இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.
இதற்கான இறுதிக்கட்ட பணியான 25 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.41 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதன்பின்னர், 25 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு திட்டமிட்டபடி இன்று மாலை 3.41 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த செயற்கைக்கோளானது இந்தியாவின் 42வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.
இதுபற்றி இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்டானது விண்ணில் முன்பே வரையறுக்கப்பட்ட வட்டபாதையில் சி.எம்.எஸ்.-01 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை சரியாக நிலைநிறுத்தியுள்ளது.
தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் நன்றாக செயல்புரிந்து வருகிறது. அடுத்த 4 நாட்களில் திட்டமிடப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்தப்படும். எங்களுடைய குழுவினர் சிறப்புடன் பணிபுரிந்தனர். கொரோனா தொற்று காலசூழலிலும் அவர்கள் பாதுகாப்புடன் செயல்பட்டனர் என மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.