ஆந்திராவில் தாக்கிய மர்ம நோய்க்கு விவசாய நிலத்தில் பயன்படுத்திய பூச்சி மருந்தே காரணம் - ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
ஆந்திராவில் தாக்கிய மர்ம நோய்க்கு விவசாய நிலத்தில் பயன்படுத்திய பூச்சி மருந்தே காரணம் என மருத்துவர்களின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலூர்,
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏலூரில் மர்மநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், திடீரென மயங்கி விழுந்தனர். வாந்தி, வலிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்பட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்ட 290 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்தார்.
மர்மநோயால் பாதிக்கப்பட்டு ஏலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நோய்க்கான காரணம் குறித்து அறிய நிபுணர்கள் குழுவிற்கு அவர் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், மர்மநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு குணமடைந்த சுமார் 200 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.
ஆரம்பத்தில், மர்மநோய்க்கு குடிநீர் மாசு காரணமாக இருக்குமா என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு மாசு ஏதும் ஏற்படவில்லை என பரிசோதனையில் தெரியவந்தது. கொசு ஒழிப்புக்காக போடப்பட்ட புகைமூட்டம், இந்த நோய்க்கு காரணமாக இருக்கக்கூடுமா என்ற சந்தேகமும் எழுந்தது. ஹைதராபாத் தேசிய ஊட்டச்சத்து நிறுவன வல்லுநர்கள் அரிசியில் கலந்திருக்கும் பாதரசமும், காய்கறிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் இருந்த பூச்சிக்கொல்லிகள் தான் காரணம் என்று தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மங்களகிரியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தைச்(AIIMS) சேர்ந்த ஒரு டாக்டர்கள் குழு, ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றது. அங்கு, முழுமையான பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளை சேகரித்தது. அவர்கள் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையில் விவசாய நிலத்தில் பயன்படுத்தப்பட்ட பூச்சி மருந்தே இந்த மர்ம நோய்க்கான காரணம் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் உடலில் ஈயம், நிக்கல் உள்ளிட்ட உலோகங்கள் எவ்வாறு கலந்தது என்பது குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.