உள்ளாட்சி தேர்தல் : ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி மகத்தான வெற்றியை நோக்கி செல்கிறது - கேரள நிதியமைச்சர்

உள்ளாட்சி தேர்தலில்ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி மகத்தான வெற்றியை நோக்கி செல்கிறது என கேரள நிதியமைச்சர் கூறி உள்ளார்.

Update: 2020-12-16 07:04 GMT
படம்: mathrubhumi
திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.  கடந்த 8-ந் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி மாவட்டங்களிலும், 10-ந் தேதி கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களிலும், 14-ந் தேதி கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அதன்படி 8-ந் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில் 73.1 சதவீதமும், 10-ந் தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 76.78 சதவீதமும், 14-ந் தேதி நடந்த 3-வது கட்ட தேர்தலில் 76.4 சதவீத வாக்குகளும் பதிவானது.

தபால் ஓட்டுகள் என்று சேர்த்து 3 கட்டமாக நடந்த தேர்தலில் மொத்தம் 78.64 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கேரளாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் 244 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. 6 மாநகராட்சிகள், 8 நகராட்சிகள், 14 மாவட்ட ஊராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஆளும் கம்யூனிஸ்ட்  கட்சியும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளன. பா.ஜ.க ஒரு சில இடங்களில் முன்னணியில் உள்ளது.

முன்னணி நிலவரம் வருமாறு :-

கிராம பஞ்சாயத்து-941
ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி -491
காங்கிரஸ் கூட்டணி -371
பா.ஜ.க-27
மற்றவர்கள்-35

பஞ்சாயத்து வார்டு-152 
ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி-93
காங்கிரஸ் கூட்டணி-56
பா.ஜ.க -2

மாவட்ட பஞ்சாயத்து-14 
ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி-11
காங்கிரஸ் கூட்டணி -3

நகராட்சி-86
ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி-38
காங்கிரஸ் கூட்டணி -39
பா.ஜ.க -3
மற்றவர்கள் -6

மாநகராட்சி- 6 
ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி--4, 
காங்கிரஸ் கூட்டணி  -2

கேரளாவின் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறியதாவது:-

உள்ளாட்சித் தேர்தலில் இடது  கம்யூனிஸ்ட் கூட்டணி மகத்தான வெற்றியை நோக்கி செல்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜகவின் அவதூறு பிரச்சாரத்தையும், மத்திய அரசின் சூழ்ச்சிகளையும் மக்கள் நிராகரித்து உள்ளனர். இது இடது அரசியல் மற்றும் கேரள அரசாங்கத்தின் வளர்ச்சி மாற்றத்திற்கான வாக்கு ஆகும் என கூறினார்.

மேலும் செய்திகள்