இந்தியாவில் ஜனவரியில் கொரோனா தடுப்பூசி ; அக்டோபருக்குள் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவர்- ஆதார் பூனவல்லா
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரியில் தொடங்கலாம், அக்டோபர் மாதத்திற்குள் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறி உள்ளார்.
புதுடெல்லி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்குகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் ஐந்து தடுப்பு மருந்துகள் இறுதி வடிவம் பெற்றுள்ளன. அதன்படி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்- ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பு மருந்தான "கோவிஷீல்ட்", பாரத் பயோடெக்கின் "கோவேக்சின்", சைடஸ் காடிலா-வின் "சிகோவ்-டி", ரெட்டிஸ் பரிசோதனைக் கூடத்தில் உருவாகி வரும் ரஷியாவின் "ஸ்புட்னிக் வி" மற்றும் சீரம் நிறுவனத்தின் மற்றொரு தடுப்பு மருந்தான "என்விஎஸ்-கோவ்2373"ஆகிய 5 மருந்துகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இவற்றுள் கோவிஷீல்டை தயாரிக்கும் சீரம் நிறுவனம், கோவேக்சின் பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் பைசர் ஆகிய மூன்று நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், அதன் பிறகு கொரோனாவிற்கு முந்தைய இயல்பு வாழ்க்கை தொடங்கும் என்றும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.
ஆதார் பூனவல்லா கூறியதாவது:-
இந்த மாத இறுதிக்குள், கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அவசர உரிமத்தைப் பெறலாம், ஆனால் பரந்த பயன்பாட்டிற்கான உண்மையான உரிமம் பிற்காலத்தில் கிடைக்க கூடும் . ஆனால் கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்தால், இந்தியாவிக் தடுப்பூசி இயக்கம் ஜனவரி 2021 க்குள் தொடங்கப்படலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தியாவில் 20 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றவுடன், நம்பிக்கையையும் புத்துணர்வுடன் மீண்டு வருவதை நாம் காணலாம்.அடுத்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகள் கிடைக்கும். மக்கள் கொரோனாவுக்கு முந்தைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என கூறினார்.