நாட்டை துண்டாட முயற்சிக்கும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை; மத்திய மந்திரி எச்சரிக்கை

விவசாயிகள் போராட்டத்தை சாதகமாக பயன்படுத்தி, நாட்டை துண்டாட முயற்சிக்கும் குழுக்கள் மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2020-12-13 23:24 GMT
பாட்னா, 

விவசாயிகள் போராட்டத்தை சாதகமாக பயன்படுத்தி, நாட்டை துண்டாட முயற்சிக்கும் குழுக்கள் மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி இருப்பதாக மத்திய மந்திரி பியூஸ் கோயல் ஏற்கனவே கூறி இருந்தார்.இந்தநிலையில், வேளாண் சட்டங்களின் நன்மைகளை விளக்க நேற்று பீகார் மாநில பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாய கூட்டத்தை மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். அதில் அவர் பேசியதாவது:-

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள். மோடி அரசு, விவசாயிகளை மதிக்கிறது. அதே சமயத்தில், விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பார்க்கும் குழுக்கள் மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

வெற்றிபெற விட மாட்டோம்

நாட்டை துண்டாட வேண்டும் என்று பேசும் இவர்கள் யார் என்று கேட்க விரும்புகிறேன். டெல்லியிலும், மராட்டியத்திலும் கலவரத்தில் ஈடுபட்டதற்காக, சிறையில் இருக்கும் அறிவுஜீவிகளை விடுதலை செய்யுமாறு இவர்கள் கோருகிறார்கள்.

அவர்களால் கோர்ட்டு மூலம் ஜாமீன் பெற முடியவில்லை. ஆகவே, விவசாயிகள் போராட்டத்தில் தஞ்சம் அடைந்து, தங்கள் நலன்களை நிறைவேற்றிக்கொள்ள பார்க்கிறார்கள். அவர்களின் இலக்கு வெற்றிபெற விட மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்