என்ன விலை கொடுத்தும் விவசாயிகள் நலன்களை பாதுகாப்போம்’-பிரதமர் மோடி உறுதி
என்ன விலை கொடுத்தாவது விவசாயிகள் நலன்களை பாதுகாப்போம் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசு விவசாய சீர்திருத்தங்கள் என்ற பெயரில் கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி தூக்கி, டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சட்டங்கள் எல்லாம் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்கு வேட்டு வைப்பதுடன், பெரு நிறுவனங்களின் கருணையால் தாங்கள் வாழ்கிற நிலைக்கு தள்ளி விடும் என்று விவசாயிகள் கருதி, அவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.
ஆனால் இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை செய்யும், அவர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்கிற வாய்ப்பைத் தரும், இடைத்தரகர்களை அகற்றும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் பிக்கி என்று அழைக்கப்படுகிற இந்திய வர்த்தக, தொழில்சபைகள் கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகையில் வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
இந்தியாவில் விவசாய துறையில் ஈடுபடும் மக்களின் வருமானத்தை பெருக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. தற்போது விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைகளில் மட்டுமல்லாது அதற்கு வெளியே உள்ளவர்களிடமும் விற்க வாய்ப்புகள் வந்துவிட்டன.
மத்திய அரசு தனது கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் மூலம் என்ன விலை கொடுத்தாவது விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க உறுதி கொண்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சீர்திருத்த சட்டங்கள், விவசாயிகள் அதிக சந்தைகளை அணுகுகிற வாய்ப்பையும், அதிக முதலீடுகளையும், தொழில்நுட்பத்தின் நன்மைகளையும் பெற்றுக்கொள்கிற வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளன. சீர்திருத்தங்கள், முக்கிய துறைகளிலும், பொருளாதார சார்பு துறைகளான உணவு பதப்படுத்துதல், குளிர்சேமிப்பு போன்றவற்றை சுற்றிலும் உள்ள பழைய தடைகளை அகற்றும். இந்த துறையில் உள்ள இடைவெளிகளை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.
இந்தியாவில் விவசாய துறையில் நிறுவனங்களின் பங்களிப்பு போதாது. துரதிர்ஷ்டவசமாக இந்திய நிறுவனங்கள் போதுமான முதலீடுகளை விவசாய துறையில் செய்யவில்லை. தனியார் துறையினர் இந்தத்துறையை அதன் முழு திறனையும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஆராய வில்லை. குளிர்சேமிப்பு மற்றும் உர உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பு விரும்பிய அளவுக்கு இல்லை.
தனியார் துறையினர் விவசாய துறையில் கூடுதல் முதலீடுகளை செய்து விவசாயிகளுக்கு ஆதரவு கிடைக்கிறபோது, அவர்களின் உற்பத்தி பொருட்கள் சிறப்பாக இருக்கும். இந்தியாவில் கடந்த காலத்தில் வரி பயங்கரவாதமும், ஆய்வாளர் ராஜ்யமும் இருந்தது. தற்போது முகமற்ற வரி மதிப்பீட்டு முறையை (இணையதள முறை) நடைமுறைப்படுத்தி உள்ள சில நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. பெரு நிறுவனங்களுக்கான வரிகள்கூட கடந்த ஆண்டு முதல் போட்டியிடத்தக்க விதத்தில் மிதமாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.