கொரோனா; இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு
கொரோனாவில் இருந்து மீட்கப்படுவதற்காக இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று வருவதை காட்டுகிறது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தொடர்ந்து இந்தியா வலிமையுடன் போராடி வருகிறது. நாடு முழுவதும் நேற்று முன்தினம் 10 லட்சத்து 65 ஆயிரத்து 176 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதன் முடிவில் நேற்று காலை 8 மணி வரையில் நாட்டில் 30 ஆயிரத்து 6 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
நாட்டில் இதுவரை 15 கோடியே 26 லட்சத்து 97 ஆயிரத்து 399 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரம் கூறுகிறது. அந்த வகையில் இதுவரை நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 98 லட்சத்து 26 ஆயிரத்து 775 ஆக உள்ளது.
இந்தியாவில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு பின்னர் நேற்று 33 ஆயிரத்து 494 பேர் மீட்கப்பட்டு வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதன்மூலம் நாட்டில் இதுவரை கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டோர் எண்ணிக்கை 93 லட்சத்து 24 ஆயிரத்து 328 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது கடந்த 15 நாட்களாக தினமும் பாதிக்கப்படுவோரை விட மீட்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.இதனால் இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம், 94.89 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.
நேற்று காலை 8 மணியுடனான ஒரு நாளில் நாட்டில் 442 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார்கள். இதன்மூலம் மொத்த உயிர்ப்பலி எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா இறப்பு விகிதம் என்பது 1.45 சதவீதமாக சரிந்துள்ளது. இது உலகின் மிகக்குறைந்த கொரோனா இறப்பு விகிதங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பலியான 442 பேரில், 87 பேர் மராட்டிய மாநிலத்தினர் ஆவார்கள். 60 பேர் டெல்லியையும், 50 பேர் மேற்கு வங்காளத்தையும், தலா 29 பேர் கேரளாவையும், பஞ்சாப்பையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.அரியானாவில் 23 பேரும், கர்நாடகத்தில் 16 பேரும், உத்தரபிரதேசத்திலும், சத்தீஷ்காரிலும் தலா 14 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 7 நாட்களாக கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை 500-க்குள் பதிவாகி வருகிறது.
இதுவரை பலியான 1 லட்சத்து 42 ஆயிரத்து 628 பேரில் அதிகபட்சமாக 48 ஆயிரத்து 59 பேரை பலி கொண்ட மராட்டிய மாநிலம், தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. 11 ஆயிரத்து 928 பேரை இழந்து கர்நாடகம் இரண்டாம் இடம் வகிக்கிறது. தமிழகம் மூன்றாவது இடத்தில் தொடர்கிறது. டெல்லியில் 9,934 பேரும், மேற்கு வங்காளத்தில் 8,966 பேரும், உத்தரபிரதேசத்தில் 8,025 பேரும், ஆந்திராவில் 7,049 பேரும், பஞ்சாப்பில் 5,036 பேரும், குஜராத்தில் 4,148 பேரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து விடுபடுவதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவது, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெற்று வருவதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. நாட்டில் தற்போது 3 லட்சத்து 59 ஆயிரத்து 819 பேர் மட்டுமே கொரோனாவில் இருந்து குணம் அடைவதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைகளை தொடர்கிறார்கள். இது மொத்த பாதிப்பில் வெறும் 3.66 சதவீதம்மட்டுமே ஆகும் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.