8 மாதங்களாக சம்பள பாக்கி : ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்; வாகனங்களுக்கும் தீ வைப்பு
8 மாதங்களாக ஊதியம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் கர்நாடகாவில் ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.;
பெங்களூரு
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நரசப்புரா என்ற இடத்தில் தைவான் நாட்டின் விஸ்டிரான் என்ற ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனத்தில் ஊழியர்களுக்கு 8மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஊதியம் வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் மூலம் நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் ஊதியத்தைத் தராத ஆத்திரத்தில், தொழிற்சாலையின் நாற்காலிகள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் என அனைத்தையும் ஊழியர்கள் அடித்து நொறுக்கினர்.
நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. ஒரு அறையில் தீ வைக்கப்பட்டது. உடனடியாக அது காவல்துறையினரால் அணைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஊழியர்கள் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் தங்களுக்கு ஊதியம் கிடைக்காவிட்டால், அங்குள்ள தொழிலாளர் துறையிடம் புகார் அளித்திருக்கலாம், அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டிருக்கலாம். ஆனால் தங்கள் எங்கு வேலை செய்தோமே, அந்த இடத்தை அடித்து நொறுக்குவது சரியல்ல என்று கோலார் காவல்துறை துணை ஆணையர் சத்தியபாமா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ஊதியத்தை முறையாக வழங்காத விஸ்ட்ரோன் நிறுவனத்துக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.