விவசாயிகள் முற்றுகையால் டெல்லியில் சாலைகள் தொடர்ந்து மூடல்
விவசாயிகள் முற்றுகையால் டெல்லியில் சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள், டெல்லியின் எல்லை பகுதிகளான சிங்கு, திக்ரி, காஜிப்பூர், சில்லா ஆகிய இடங்களில் முற்றுகையிட்டுள்ளனர். இதனால், டெல்லியில் உள்ள பல்வேறு சாலைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
இதனால், வாகன ஓட்டிகளின் நலனுக்காக டெல்லி போக்குவரத்து போலீஸ், போக்குவரத்து குறித்து ‘டுவிட்டர்’ பக்கத்தில் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
நேற்று அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், திக்ரி, தான்சா எல்லைகளில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்றும், ஜாதிகாரா எல்லை இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கு மட்டும் திறக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினர்.அரியானா மாநிலத்துக்கு செல்பவர்கள் பயன்படுத்த வேண்டிய சாலைகளையும் அவர்கள் தெரிவித்தனர்.