எல்லை கோட்டை தன்னிச்சையாக மாற்ற முயன்ற சீனாவின் செயல்தான் மோதலுக்கு காரணம்; இந்தியா குற்றச்சாட்டு

எல்லை கோட்டை தன்னிச்சையாக மாற்ற முயன்ற சீனாவின் செயல்தான் மோதலுக்கு காரணம் என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2020-12-11 20:07 GMT
புதுடெல்லி,

லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் இடையே கடந்த 6 மாதங்களாக பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு இந்தியாதான் காரணம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் குற்றம் சாட்டி இருந்தார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

நமது நிலைப்பாடு தெளிவானது. இதை கடந்த காலங்களில் பலதடவை சொல்லி இருக்கிறோம். சீனா, எல்லை கோட்டின் தன்மையை தன்னிச்சையாக மாற்ற முயன்றது. அதுதான் கடந்த 6 மாதங்களாக நாம் அங்கு பார்க்கும் நிலைமைக்கு காரணம். இது, இருதரப்பு ஒப்பந்தங்களை மீறிய செயல் ஆகும். 

இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டிப்பாக பின்பற்றவும், பேச்சுவார்த்தை மூலம் எல்லை பிரச்சினையை தீர்க்கவும் உறுதி பூண்டிருப்பதாக சீனா கூறியிருப்பதை கவனத்தில் கொண்டுள்ளோம். தனது வார்த்தைகளை செயல்வடிவத்தில் காண்பிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேற்கொண்டு நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் மூலம் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்படும் தீர்வு உருவாகும் என்றும், படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்