கொரோனா தடுப்பூசி பணி ஏற்பாடுகள் பற்றி மத்திய உள்துறை செயலாளர், மாநில அரசுகளுடன் ஆலோசனை
கொரோனா தடுப்பூசி பணி ஏற்பாடுகள் பற்றி மத்திய உள்துறை செயலாளர், மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி கடந்த 28-ந் தேதி நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரி, 3 தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இதனால், கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
தடுப்பூசி கிடைத்தவுடன் அதை விரைவாக வினியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தயார்நிலையில் வைத்துள்ளது. இந்தநிலையில், கொரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் அதை போடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போலீஸ் டி.ஜி.பி.க்கள், இதர உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட வேண்டிய முன்கள பணியாளர்களின் தகவல் தொகுப்பை தயாரிக்குமாறு மாநில அரசுகளை அஜய்குமார் பல்லா கேட்டுக்கொண்டார். முன்கள பணியாளர்களான போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு படையினர் ஆகியோரின் பட்டியலை தயாரிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.