மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜனதா தொண்டர்கள் மோதல்
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தொண்டர்களுக்கும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் பஸ்சிம் பர்த்தமான் மாவட்டத்துக்கு உட்பட்ட பரபானி மூர் பகுதியில் உள்ளூர் பா.ஜனதா சார்பில் பேரணி ஒன்று நடந்தது. இந்த பேரணி முடிவடைந்ததும் பா.ஜனதா தொண்டர்களுக்கும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் வெடிகுண்டுகள் வீசியும், கல், கம்புகளாலும் தாக்கிக்கொண்டனர். மேலும் அங்கிருந்த வீடுகளும் சூறையாடப்பட்டன. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். பா.ஜனதா தரப்பில் மட்டுமே 7 பேர் காயமடைந்ததாக கட்சியினர் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் மீது பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக இந்த மோதலின் பின்னணியில் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதாகவும், மேலும் நிலக்கரி சுரங்க மாபியாக்களும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அசன்சோல் பா.ஜனதா எம்.பி.யும், மத்திய மந்திரியுமான பாபுல் சுப்ரியோ கூறியுள்ளார்.
ஆனால் இது பா.ஜனதாவின் உள்கட்சி மோதல் என திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறியுள்ளார். ஆளுங்கட்சியை களங்கப்படுத்துவதற்காக பா.ஜனதாவினர் இந்த குற்றச்சாட்டை கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மோதலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.