நாங்கள் படித்தவர்கள்; சட்டங்களை வாபஸ் பெற பேச்சுவார்த்தையில் வலியுறுத்துவோம்: விவசாய தலைவர் பேட்டி
நாங்கள் கல்வியறிவு கொண்டவர்கள் என்றும் சட்டங்களை வாபஸ் பெற பேச்சுவார்த்தையில் வலியுறுத்துவோம் என்றும் விவசாய தலைவர்களில் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
விவசாயிகள் நலனுக்கான மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து 8வது நாளாக இந்த போராட்டம் இன்றும் நீடிக்கிறது.
டெல்லி அரசு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், விவசாயிகள் சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் திரண்டுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தலைமையில் விவசாயிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பல்வேறு மந்திரிகளும் பங்கேற்றனர். இதேபோன்று விவசாயிகள் சார்பில் 35க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே இன்று 2-ம் சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது.
இதுபற்றி விவசாய தலைவர்களில் ஒருவர் அளித்த பேட்டியில் கூறும்பொழுது, 35 விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் அரசை சந்திக்க போகிறோம். நாங்கள் கல்வியறிவு கொண்டவர்கள். எங்களுக்கு எது நல்லது என்பது எங்களுக்கு தெரியும். இந்த சட்டங்கள் வாபஸ் பெறப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதனை அரசிடம் வலியுறுத்துவோம் என கூறியுள்ளார்.
போராட்டத்தில் அனைத்து விவசாய சங்க தலைவர்களையும் அழைக்காவிட்டால் பேச்சுவார்த்தையில் பங்கேற்க போவதில்லை என மற்றொரு விவசாய சங்க தலைவர் கூறிய நிலையில், அரசுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என விவசாய சங்க தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.