அனைத்து காற்று மாசு நகரங்களில் பட்டாசுக்கு தடையை நீட்டித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
கொரோனா காலத்தில், காற்று மாசடைந்த நாட்டின் அனைத்து நகரங்களிலும் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் ஒட்டு மொத்த தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
காற்று மாசு தொடர்பாக தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த நவம்பர் 9-ந்தேதி தலைநகர் டெல்லி மற்றும் காற்று மாசுபாடு அதிகம் உள்ள மாநகரங்கள், நகரங்களுக்கு நவம்பர் 30-ந்தேதி நள்ளிரவு வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதித்தது.
இந்த உத்தரவுக்கான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் இசைவு குறித்த நிலை அறிக்கை, காற்றின் தரம் குறித்த விரிவான அறிக்கையை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 1-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.
அதன்படி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வில் நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. விசாரணை தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
டெல்லி, தேசிய தலைநகர் வலய பகுதிகளிலும், 200-க்கும், அதற்கும் அதிகமாக காற்றின் தர குறியீட்டுடன் மோசமான பிரிவுகளில் பதிவாகும் (மாசடைந்துள்ள) நாட்டின் அனைத்து நகரங்களிலும் கொரோனா காலத்தில் அனைத்து வகையான பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் ஒட்டு மொத்த தடை விதிக்கப்படுகிறது.
மிதமான காற்றின் தரக் குறியீடு உள்ள மாநகரங்கள், நகரங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளின்போது நள்ளிரவு 11.55 முதல் 12.30 மணி மட்டுமே வெடிக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு காற்றின் தர கண்காணிப்பு மையத்தை விரைவில் ஏற்படுத்த வேண்டும்.
தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யாமல் இருக்க மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்வோர், வெடிப்பவர்கள் மீது கலெக்டர்கள் அபராதம் விதிக்கலாம். வசூலிக்கப்படும் அபராத தொகை மாவட்ட சுற்றுச்சூழல் மேம்பாடு திட்டங்களுக்கு செலவிடலாம்.
மேற்கண்ட உத்தரவுகளை அனைத்து மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் கடைப்பிடித்து, காற்று மாசு குறித்த விவரங்களை 2021-ம் ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் சேகரித்து, அவை குறித்த அறிக்கையை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மார்ச் 15-ந்தேதிக்குள் அளிக்க வேண்டும். திரட்டப்பட்ட அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மார்ச் இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.