சபரிமலை கோவிலில் அதிக பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கபட்டு உள்ளது. வார இறுதி நாட்களான சனி , ஞாயிற்றுகிழமைகளில் 3 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.;
திருவனந்தபுரம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
தற்போது சபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வார இறுதி நாட்களான சனி , ஞாயிற்றுகிழமைகளில் 3 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் (டி.டி.பி) வேண்டுகோளின் அடிப்படையில் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் புனித யாத்திரை குழுவின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் பம்பாவிற்கும் சன்னிதானத்திற்கும் இடையில் வெவ்வேறு இடங்களில் இருப்பார்கள், எனவே எண்ணிக்கை உயர்த்தப்பட்டாலும் கூட்டம் இருக்காது. தற்போது கருவறைக்கு முன்னால் ஒரு பக்தர் கூட இல்லாத நேரங்கள், குறிப்பாக மாலை நேரங்களாக உள்ளன. இந்த சூழலில் நாங்கள் இந்த திட்டத்தை முன்வைத்துள்ளோம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. ஒரு பக்தர் கூட இதுவரை கொரோனா பாதிப்படையவில்லை, என்று தலைவர் என் வாசு கூறினார்.
இந்த நிலையில் கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முடியாததால் பலர் கோவில் 'பிரசாதங்களை' ஸ்பீட் போஸ்ட் மூலம் தங்கள் வீட்டிலேயே பெற்று கொள்ளலாம்.
முதல் இரண்டு வாரங்களில், 10,000 க்கும் மேற்பட்டோர் இந்தியா ஸ்பீட் போஸ்ட் மூலம் சபரிமலை 'பிரசாதம்' பெற்று உள்ளனர். இந்த திட்டம் குறித்து கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த தபால் துறை திட்டமிட்டுள்ளது.