டெல்லியில் சந்தை பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்க அதிகாரம் தேவை - மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

கொரோனாவை பரப்பும் பகுதிகளாக உருவெடுக்கும், சந்தை பகுதியில் ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2020-11-17 22:58 GMT
புதுடெல்லி, 

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இணையவழியில் பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “ டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசும், எல்லா அமைப்புகளும் இரட்டை முயற்சியுடன் பாடுபட்டு வருகின்றன. இந்த கடினமான நேரத்தில் டெல்லி மக்களுக்கு உதவும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

டெல்லியில் சந்தை பகுதிகள், கொரோனாவை பரப்பும் பகுதிகளாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. ஆகவே, அத்தகைய பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசிடம் அதிகாரம் கேட்டுள்ளேன்.

அதுபோல், திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை பங்கேற்பதற்கான அனுமதியை 50 பேராக குறைப்பதற்கான யோசனையை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளோம். பொதுமக்கள், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்