பீகார் மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ் குமார்
பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பாட்னா,
பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைக்கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் மூத்த தலைவரும், முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி, இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்க வைத்தது.
இதையடுத்து, நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், கூட்டணியின் சட்ட சபை குழு தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து பாட்னாவில் உள்ள கவர்னர் மாளிகைக்கு நிதிஷ்குமார் சென்றார். கவர்னர் பாகு சவுகானை சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார். தொடர்ந்து ஆட்சி அமைக்க நிதிஷ்குமாருக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.
இதன்படி, பீகார் கவர்னர் மாளிகையில் இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. நிதிஷ் குமாருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிதிஷ்குமாருடன் 14 மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர். பீகார் முதல்வராக நிதிஷ் குமார் 7-வது முறையாக பதவியேற்றுள்ளார். பாஜகவைச் சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.