பீகாரில் 7வது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார் நிதிஷ் குமார்
பீகார் முதல் மந்திரியாக ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இன்று 7வது முறையாக பதவி ஏற்கிறார்.
பாட்னா,
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபை தேர்தல் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. கடந்த 10ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி (பா.ஜ.க. 74, ஐக்கிய ஜனதா தளம் 43) பெரும்பான்மை பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் மிக குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும், தேர்தலுக்கு முன்பே பா.ஜ.க. கூறியது போல் நிதிஷ் குமார் மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்பது என கூட்டணியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது.
இதன்படி, நிதிஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்கிறார். இவர் முதல் முறையாக 2000-ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி முதல் மந்திரியாக பதவி ஏற்றார். ஆனால் 7 நாட்கள் மட்டுமே பதவி வகித்தார்.
இதன் பின்னர் 2வது முறையாக 2005 நவம்பர் 24-ந்தேதி பதவி ஏற்றார். 5 ஆண்டு பதவி வகித்தார். 3வது முறையாக 2010 நவம்பர் 26-ந்தேதி பதவி ஏற்றார். 4 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
இதனை தொடர்ந்து, 4-வது முறையாக 2015 பிப்ரவரி 22-ந்தேதி பதவி ஏற்று அதே ஆண்டின் 2015 நவம்பர் 19 வரை பதவி வகித்தார். 5-வது முறையாக 2015 நவம்பர் 20-ந்தேதி பதவி ஏற்று 2017 ஜூலை 26 வரை பதவியில் இருந்தார். 6-வது முறையாக 2017 ஜூலை 26-ந்தேதி பதவி ஏற்று தற்போது வரை பதவி வகித்துள்ளார்.
முதல் முறை மட்டும் சமதா கட்சி சார்பிலும், மற்ற முறைகள் ஐக்கிய ஜனதாதளம் சார்பிலும் நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், 7வது முறையாக அவர் பதவி ஏற்க இருக்கிறார். பீகாரின் 37வது முதல் மந்திரியாக பதவி ஏற்கும் 69 வயது நிறைந்த நிதிஷ் குமார், 3 முறை முழு பதவி காலமும் நிறைவு செய்த பெருமையை கொண்டவர்.