டெல்லியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசு - பொதுமக்கள் அவதி

டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான சுற்றுச்சூழல் மாசு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Update: 2020-11-11 02:14 GMT
புதுடெல்லி, 

தலைநகர் டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குளிர்கால பனிப்பொழிவின் இடையே காற்று மாசு கலந்து பார்வை இடைவெளியை குறைக்கிறது. அது மட்டுமின்றி, கண் எரிச்சல், சருமநோய் பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது.

டெல்லியில் நேற்று காலை வீதியெங்கும் பனிமூட்டம் போல ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. மந்திர் மார்க், பஞ்சாபி பாக், ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள காற்றுத்தர குறியீட்டு கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரக்குறியீடு மிகவும் கடுமையான நிலையில் பதிவானது.

காற்றின் தரக்குறியீடு 50 வரை இருந்தால் அது நல்ல நிலை. 50-க்கு மேல் 100 வரை என்பது சுமாரான நிலை. 100-க்கு மேல் 200 வரை மிதமான நிலை. 200-க்கு மேல் 300 வரை மோசமான நிலை. 300-க்கு மேல் 400 வரை மிக மோசமான நிலை. 400-க்கு மேல் மிக கடுமையான நிலை ஆகும். நேற்று டெல்லியில் 487 ஆக காற்றின் தரக்குறியீடு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோய் பரவல் காலத்தில், டெல்லியில் காற்றில் மாசு அளவு மிகவும் அதிகரித்து இருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாட்களில் காற்று மாசு குறையுமா என்பது சந்தேகம்தான் என்று நிபுணர்கள் கூறியிருப்பது மேலும் மக்களுக்கு அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.

மேலும் செய்திகள்