மத்திய பிரதேச இடைத்தேர்தலில் முன்னிலை - பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மத்திய பிரதேசத்தில் 28 இடங்களுக்கான இடைத்தேர்தலில் பாஜக 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

Update: 2020-11-10 08:22 GMT
போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில், 28 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் தற்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 107 ஆக உள்ளது. எனவே மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க. 9 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டியதுள்ளது. 

அதேபோல், 88 எம்.எல்.ஏ.க்களை தங்கள் கைவசம் வைத்துள்ள காங்கிரஸ், இழந்த ஆட்சியை மீண்டும் பெற போட்டியிடும் 28 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும் அல்லது குறைந்தது 21 தொகுதிகளில் வெற்றிபெற்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்கலாம்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், 19 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதே நேரம் காங்கிரஸ் 8 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருவதாக தற்போதைய நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் தேவைப்படும் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருவது தெரிய வந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு பாஜக நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்