பண மதிப்பிழப்புக்கு பிறகே ஊழல் அதிகரித்தது: பிரதமருக்கு அகிலேஷ் யாதவ் பதிலடி

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்புப் பண புழக்கம் குறைந்துள்ளது என பிரதமர் மோடி நேற்று கூறியிருந்தார்.;

Update: 2020-11-09 06:21 GMT
லக்னோ,

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8-மணி அளவில் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,  500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்திய பொருளாதாரத்தில் கடும் அதிர்வலைகளை இந்த விவகாரம் ஏற்படுத்தியது. 

 பிரதமரின் அறிவிப்பால் ஒரே நாளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது. அத்துடன் மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை வங்கியில் செலுத்தி, அதற்கு பதில் புதிய நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தார். இதன்படி வங்கியில் செல்லாத நோட்டை செலுத்தி புதிய 2000 நோட்டுகள் மற்றும் ரூ.500 நோட்டுக்களை மக்கள் படிப்படியாக பெற்றுக்கொண்டனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நடவடிக்கை மேற்கொண்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில், நேற்று இதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, “ பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு கருப்புப் பணப் புழக்கம் குறைந்துள்ளது. வெளிப்படத்தன்மை அதிகரித்தது” என்றார். 

இதனைத் தொடர்ந்து பிரதமருக்கு பதிலளிக்கும்விதமாக தனது டுவிட்டர் பதிவில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

"நான்கு ஆண்டுகளாக பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகும், போலி பணத்தாள்கள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. பணமதிப்பு நீக்கத்திற்கு பின்புதான் ஊழல் அதிகரித்துள்ளது. கருப்புப் பணம் குறையவில்லை. கருப்புப் பணத்திற்கு எந்தவித கணக்கீடும் இல்லை. மக்கள் தங்கள் கணக்குகளில்15 லட்சம் பெறவில்லை" என்றார். 

மேலும் செய்திகள்