பட்டாசு பிரியரா நீங்கள் பசுமை பட்டாசுகளை எப்படி கண்டறிவது?
பசுமை பட்டாசுகளை கண்டறிவது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க தடை விதிப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். இதற்கு இந்துமத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. பசுமை பட்டாசுகள் என்ன என்பது பொதுமக்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதாவது, சாதாரண பட்டாசுகளில் லிதியம், பேரியம் போன்ற ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
ஆனால் பசுமை பட்டாசுகளில் இந்த ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுவது இல்லை. இதனால் 30 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மாசு ஏற்படுவது குறைகிறது. அதே நேரத்தில் ஒளி மற்றும் ஒலியில் பெரிதாக எந்த வேறுபாடும் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் பசுமை பட்டாசுகளின் பாக்கெட் மீது முத்திரை, கியூ.ஆர்.கோடு ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், “பசுமை பட்டாசுகள் கர்நாடகத்தில் இன்னும் சந்தைக்கு வரவில்லை. பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஆர்வம் உள்ளவர்கள், இந்த பசுமை வகை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்“ என்றுள்ளது.
இந்த பசுமை பட்டாசுகள் கடந்த ஆண்டு தான் அறிமுகம் செய்யப்பட்டவை என்பதால், சந்தைக்கு அதிகமாக வரவில்லை என்று வியாபாரிகள் கூறுகிறார்கள்.