“கமலா ஹாரிஸ் ஒரு போராளி” துணை அதிபராக அவர் பதவியேற்பதில் பெருமை அடைகிறேன் - தாய்வழி மாமா
கமலா ஹாரிஸ் ஒரு போராளி. துணை அதிபராக அவர் பதவியேற்பதில் பெருமை அடைகிறேன் என்று அவரது உறவினரான கோபாலன் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 77 வயதான ஜோ பைடன் அதிக அளவிலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். துணை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 56 வயதான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றும் கருப்பினத்தைச் சேர்ந்த அமெரிக்கர் துணை அதிபராகிறார் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
இதனிடையே இதுகுறித்து கமலா ஹாரிஸின் தாய் வழி (மாமா) உறவினரான கோபாலன் பாலச்சந்திரன் கூறியதாவது, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் வெற்றியை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.
துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்று ஏற்கனவே தெரிவித்தேன். தற்போது அது நிறைவேறியுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தருணம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கமலா ஹாரிஸ் ஒரு போராளி. துணை அதிபராக அவர் பதவியேற்பதில் பெருமை அடைகிறேன்.
வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள கமலா ஹாரிஸின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக கமலாவின் குடும்பத்தினருடன் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.