வெள்ளத்தால் ஐதராபாத் நகரம் பெரும் இழப்பை சந்தித்த போதும் கூட மத்திய அரசு உதவிக்கரம் நீட்டவில்லை - சந்திரசேகர் ராவ் குற்றச்சாட்டு
ஐதராபாத் நகரம் வெள்ளத்தால் பெரும் இழப்பை சந்தித்த போதும் கூட மத்திய அரசு உதவிக்கரம் நீட்டவில்லை என்று தெலுங்கான முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் குற்றம்சாட்டி உள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 'சமீபத்திய மழை மற்றும் வெள்ளத்திற்கு மத்திய அரசின் உதவி' என்ற தலைப்பு தொடர்பாக மறு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில அதிகாரிகள் கலந்துகொண்டு முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ்வுடன் கலந்துரையாடினர்.
முதல்வர் சந்திரசேகர ராவ், அக்டோபர் 15 அன்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் செய்யப்பட்ட முதன்மை மதிப்பீடுகளின்படி ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு என்பதைச் சுட்டிக்காட்டி, உடனடி நிவாரணமாக 1,350 கோடி ரூபாய் கோரியதையும் கூட்டத்தின்போது அதிகாரிகள் நினைவுபடுத்தினர்.
இத்தனைக்கும் பிறகு, மத்திய அரசிடமிருந்து சில உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் இன்றைய நாள்வரை ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்''.
அதனை தொடர்ந்து சந்திரசேகர் ராவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தெலுங்கானாவில் பலத்த மழை மற்றும் வெள்ளம் குறித்து குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் தங்கள் அனுதாபத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் என்னுடன் பேசி தனிப்பட்ட முறையில் நிலைமை குறித்து விசாரித்தனர்.
மத்தியக் குழுவும் மாநிலத்திற்கு வருகை தந்து நிலைமையை மதிப்பீடு செய்தது. ஆனால், நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்த மத்திய அரசு அவ்வாறு எதுவும் செய்யவில்லை.
மத்திய அரசு வெற்று வாக்குறுதிகளை அளிக்கிறது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்கள் மாநிலத்தில் வெள்ள நிவாரணத்திற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் மாநிலத்தால் பெரும் இழப்புகள் ஏற்பட்ட போதிலும், இந்த விஷயத்தில் ஒரு ரூபாயைக் கூட உதவியாக வழங்கத் தவறிய மத்திய அரசின் அணுகுமுறை அம்பலமாகியுள்ளது.
ஐதராபாத் போன்ற ஒரு நகரம் பெரும் இழப்பைச் சந்தித்தபோதும் மத்திய அரசு உதவிக்கரம் நீட்டவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது" என்று தெரிவித்தார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் செய்யப்பட்ட முதன்மை மதிப்பீடுகளின்படி ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடி நிவாரணமாக 1,350 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று சந்திரசேகர் ராவ் கோரி இருந்தார்.
வெள்ள நிவாரணம் மற்றும் பயிர் இழப்பு இழப்பீட்டிற்காக மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (எஸ்.டி.ஆர்.எஃப்) உடனடி நடவடிக்கையாக மத்திய அரசு 224.5 கோடி ரூபாய் விடுவிப்பதாக மத்திய உள்துறை இணை மந்திரி ஜி கிஷன் ரெட்டி கடந்த வாரம் அறிவித்தது நினைவுகூறத்தக்கது.