பீகார் சட்டசபை தேர்தல்; பணியில் உயிரிழந்த தேர்தல் பணியாளர் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு

பீகார் சட்டசபை தேர்தல் பணியில் உயிரிழந்த தேர்தல் பணியாளர் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-11-07 10:43 GMT
முசாபர்பூர்,

கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தலை பாதுகாப்புடன் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.  இதன்படி, 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடந்து வருகிறது.  முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தல் முறையே கடந்த அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 3 ஆகிய நாட்களில் நடந்து முடிந்தது.

78 தொகுதிகளுக்கான 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.  தேர்தலை முன்னிட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.  தேர்தலில் 2.35 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர்.

இந்நிலையில், முசாபர்பூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி கமல் சிங் கூறும்பொழுது, தேர்தல் பணியில் இன்று ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார்.

நீர்பாசன துறையை சேர்ந்த அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  விதிகளின்படி, உயிரிழந்த தேர்தல் பணியாளர் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்