கர்நாடகாவில் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் - குமாரசாமி வலியுறுத்தல்
கர்நாடகாவில் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வலியுறுத்தி உள்ளார்.;
பெங்களூரு,
இது குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் பொதுமக்கள் ஏற்கனவே கொரோனா பாதிப்பு மற்றும் வெள்ள பாதிப்புகளால் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஒரு யூனிட்டுக்கு சராசரியாக 40 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் மீதி நிதி சுமை அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலுக்கு பிறகு மக்கள் அதிக நிதி நெருக்கடியில் உள்ளனர். அனைத்து துறைகளும் இழப்பை சந்தித்துள்ளன. வேலையின்மை, சம்பள குறைப்பு போன்றவற்றால் மக்கள் பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளனர். அதனால் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். அடுத்த ஒரு ஆண்டுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.