சரியான நேரத்தில் முடிவெடுத்து பிரதமர் மோடி கொரோனா பாதிப்பில் இருந்து நாட்டை காப்பாற்றி உள்ளார்; ஜே.பி. நட்டா பேச்சு

சரியான நேரத்தில் முடிவெடுத்து பிரதமர் மோடி கொரோனா பாதிப்பில் இருந்து 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டை காப்பாற்றி உள்ளார் என தேர்தல் பிரசாரத்தில் ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.

Update: 2020-11-05 16:32 GMT
தர்பங்கா,

பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து வருகிறது.  இதன்படி, முதல் கட்ட தேர்தல் கடந்த 28-ந் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கடந்த 3-ந் தேதியும் நடந்து முடிந்தது.  3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் 7-ந் தேதி நடக்கிறது.  வாக்கு எண்ணிக்கை 10-ந் தேதி நடக்கிறது.

இதனை முன்னிட்டு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பிரசார பேரணி ஒன்றில் கலந்து கொண்டு தொண்டர்கள் முன் பேசும்பொழுது, அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  கொரோனா தொற்றை முறையாக கையாள தெரியவில்லை என டிரம்புக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

ஆனால், 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டை சரியான நேரத்தில் முடிவெடுத்து பிரதமர் மோடி காப்பாற்றியுள்ளார் என பேசியுள்ளார்.

அவர் தொடர்ந்து, ஒருபுறம் வளர்ச்சி, கல்வி மேம்பாடு, கல்லூரிகள் திறப்பு, சாலை கட்டமைப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவது உள்ளிட்ட விசயங்களை மேற்கொள்ளும் மக்கள் உள்ளனர்.  மறுபுறம் சட்ட மீறலில் ஈடுபட்டு வளர்ச்சியை நிறுத்திய மக்கள் உள்ளனர்.  உங்களது விதியை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்