ஜெகன் மோகன் ரெட்டி மீது அவமதிப்பு வழக்கு இல்லை - அட்டார்னி ஜெனரல் ஒப்புதல் அளிக்க மறுப்பு
முதல் பார்வையிலேயே, முதல்-மந்திரி, அவரது முதன்மை ஆலோசகர் ஆகியோரது செயல் கீழ்ப்படியாமை என்று தெரிகிறது;
புதுடெல்லி,
ஆந்திர மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமான ஒரு சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி, தனக்கு எதிராக செயல்படுவதாகவும், தனது அரசை கவிழ்க்க ஆந்திர ஐகோர்ட்டு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார்.
இதன் அடிப்படையில், ஜெகன் மோகன் ரெட்டி மீதும், அவருடைய முதன்மை ஆலோசகர் அஜய கல்லம் மீதும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்கக்கோரி, அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலுக்கு பா.ஜனதாவை சேர்ந்த வக்கீல் அஸ்வினி உபாத்யாயா கடிதம் எழுதினார்.
இந்த கடிதத்தை பரிசீலித்த அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க மறுத்து விட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
முதல் பார்வையிலேயே, முதல்-மந்திரி, அவரது முதன்மை ஆலோசகர் ஆகியோரது செயல் கீழ்ப்படியாமை என்று தெரிகிறது. ஆனால், தனக்கு எழுதப்பட்ட கடிதத்தை தலைமை நீதிபதியே ஆய்வு செய்து வருகிறார். ஆகவே, நான் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.