நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரரின் தாய்க்கு இலவச சர்ஜரி செய்த மருத்துவர்

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரரின் தாய்க்கு இலவச அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு நாலாபுறமும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.;

Update: 2020-11-02 05:50 GMT
புனே,

மராட்டியத்தின் அவுரங்காபாத் நகரில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் அல்டாப் ஷேக்.  இவருக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.  அப்படி என்ன சாதனை செய்து விட்டார் என தொடர்ந்து காண்போம்.

சாந்தாபாய் சுராட் என்ற மூதாட்டிக்கு உடல்நலம் சரியில்லை.  இதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.  இவரது இரண்டு மகன்களில் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்.

காஷ்மீரின் குப்வாராவில் ராணுவ வீரரான இவரது மற்றொரு மகன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்து விட்டார்.  வீரரின் விதவை மனைவிக்கு ஓய்வூதிய தொகை கிடைக்கிறது.  ஆனால், சாந்தாபாய்க்கு எந்த வருவாயும் இல்லை.

இந்த நிலையில் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்படுகிறது.  இவரது மகன் ராணுவத்தில் உயிர்த்தியாகம் செய்தது உள்ளிட்ட விசயங்களை அறிந்த மருத்துவர் ஷேக் அவருக்கு உதவ முன் வந்துள்ளார்.  இதற்காக கட்டணம் இன்றி சர்ஜரி செய்ய மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசியுள்ளார்.

அறுவை சிகிச்சையும் வெற்றி பெற்றது.  இதன்பின்னர் மருத்துவமனையில் இருந்து அந்த மூதாட்டி வீடு திரும்பும் முன் பிரிவை நினைத்து அவரை கட்டி பிடித்து மருத்துவர் ஷேக் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.  இந்த வீடியோ வெளிவந்து வைரலானது.

இதுபற்றி மராட்டிய மந்திரி மற்றும் காங்கிரஸ் தலைவரான அசோக் சவான் அறிந்து மருத்துவரை தொலைபேசியில் அழைத்து தக்க சமயத்தில் செயலாற்றியதற்காக அவரை பாராட்டியுள்ளார்.  இதேபோன்று பல்வேறு தரப்பினரும் ஷேக்கை புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்