கடந்த பிப்ரவரிக்கு பின் முதன்முறையாக அக்டோபரில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை கடந்தது
இந்தியாவில் ஜி.எஸ்.டி. வருவாய் கடந்த பிப்ரவரிக்கு பின் முதன்முறையாக அக்டோபரில் ரூ.1.05 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு பின்னர் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் பாதிப்படைந்தது. நடப்பு ஆண்டில் ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் முறையே -14%, -8% மற்றும் 5% என்ற அளவில் வரி வருவாய் சரிவை சந்தித்திருந்தது.
இந்நிலையில், ஆச்சரியமூட்டும் வகையில் நடப்பு ஆண்டு அக்டோபரில் முதன்முறையாக ஜி.எஸ்.டி. வருவாய் ஆனது கடந்த பிப்ரவரிக்கு பின் ரூ.1 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதன்படி, ஜி.எஸ்.டி. மொத்த வருவாய் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 155 கோடியாக உயர்ந்து உள்ளது.
இவற்றில் சி.ஜி.எஸ்.டி. ரூ.19,193 கோடியாகவும், எஸ்.ஜி.எஸ்.டி. ரூ.25,411 கோடியாகவும், ஐ.ஜி.எஸ்.டி. ரூ.52,540 கோடியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிடைத்த ஜி.எஸ்.டி. வருவாயை விட இந்த ஆண்டு அக்டோபரில் 10% வருவாய் வளர்ச்சியை எட்டியுள்ளது.
இதேபோன்று கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் முடிவடைந்த காலகட்டத்துடன் ஒப்பிடும்பொழுது, நடப்பு அக்டோபரில் சரக்குகளை இறக்குமதி செய்த வகையில் கிடைத்த வருவாய் 9% அளவுக்கு உயர்ந்தும், உள்நாட்டு பரிமாற்றம் வகையில் (இறக்குமதி சேவை உள்பட) 11% அளவுக்கு வருவாய் உயர்ந்தும் உள்ளது. கடந்த செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.95,480 கோடியாக இருந்தது.