டெல்லியில் பனிபோல் படர்ந்த புகை - பொதுமக்கள் அவதி
டெல்லியில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு காற்று மாசு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரித்துள்ளது. காலையில், பனிபோல் புகை படர்ந்து காணப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சாலைகள் தெளிவாக புலப்படாததால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
மத்திய மாசு கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட தகவலின் படி, இன்று காலை 8 மணி நிலவரப்படி டெல்லி, குருக்ராம் மற்றும் நொய்டாவில் காற்றின் தரம் முறையே 365, 318, 386- என பதிவானது.
காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக கூறியுள்ள மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பு, நீண்ட காலம் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சுவாச நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறியுள்ளது
காற்றின் தர அளவுகளில் 0-50 நல்ல நிலை எனவும் 51-100 திருப்திகரமானது எனவும் 201-300 - மிதமானது எனவும் 201-300- மோசமானது, 301-400 மிக மோசமானது, 401-500 தீவிர மோசமானது என வரையறுக்கப்படுகிறது.