காஷ்மீர் மீது படையெடுத்த பாகிஸ்தான்; உலக நாடுகளில் கருப்பு தினம் கடைப்பிடிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுத்த 73வது ஆண்டு தினம் இன்று கருப்பு தினம் ஆக பல்வேறு உலக நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீர் மீது கடந்த 1947ம் ஆண்டு அக்டோபர் 22ந்தேதி பாகிஸ்தான் நாடு அத்துமீறி படைபெயடுப்பு நடத்தியது. இதில் பாராமுல்லா நகரை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 45 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர் என கூறப்படுகிறது.
குல்மார்க் நகரை கைப்பற்றும் முயற்சியாக தாக்குதல் நடந்த இந்த தினம் ஜம்மு மற்றும் காஷ்மீர் வரலாற்றில் கருப்பு தினம் என அழைக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு காத்மண்டு, டோக்கியோ, டாக்கா, தி ஹேக், கோலாலம்பூர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பல்வேறு உலக நாடுகளின் முக்கிய நகரங்களில் கருப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
பாகிஸ்தான் ராணுவத்தின் காட்டுமிராண்டித்தன தாக்குதலை எதிர்த்து பல்வேறு எதிர்ப்பு பேரணிகள் நடந்தன. எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட துணிகள் உள்ளிட்டவையுடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல்வேறு மக்களும் கருப்பு கொடிகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
நகரின் பல்வேறு பகுதிகளிலும், காஷ்மீரில் சட்டவிரோத வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளது என்ற வாசகங்கள் எழுதப்பட்ட போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. உயிரிழப்புகளுக்காகவும், பொருட்சேதங்களுக்காகவும் இழப்பீடு தர வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டு இருந்தது.