கேரளா: வயநாட்டில் இன்று நடைபெறும் கொரோனா ஆய்வு கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு
3 நாள் பயணமாக கேரளாவுக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு கொரோனா தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.;
மலப்புரம்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக நேற்று கேரளாவுக்கு வந்தார். கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்துக்கு பகல் 12 மணிக்கு விமானத்தில் வந்தடைந்தார்.
வயநாடு தொகுதியில் அடங்கிய மலப்புரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தொகுதி எம்.பி. என்ற முறையில், அதில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். மலப்புரம் மாவட்டத்தில், மாநிலத்திலேயே அதிக அளவாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆய்வு கூட்டத்துக்கு பிறகு, காவ்யா, கார்த்திகா என்ற சகோதரிகளுக்கு புதிய வீட்டுக்கான சாவியை ராகுல் காந்தி கொடுத்தார். அவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மலப்புரம் மாவட்டம் கவலப்பாரா என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெற்றோரையும், வீட்டையும் இழந்தவர்கள் ஆவர். பின்னர், ராகுல் காந்தி வயநாடு சென்றார். இரவில் அங்கு தங்கினார்.
இதனைத்தொடர்ந்து வயநாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் கொரோனா ஆய்வு கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். கல்பேட்டாவில் நடைபெறும் மத்திய அரசு திட்டங்கள் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
நாளை (புதன்கிழமை) மணந்தவாடியில் உள்ள கொரோனா ஆஸ்பத்திரிக்கு ராகுல் காந்தி செல்கிறார். அதையடுத்து, கண்ணூர் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.