ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் பணம் ரூ.43 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

Update: 2020-10-20 01:20 GMT
ஸ்ரீநகர், 

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லாவிடம் மாநில கிரிக்கெட் அமைப்பின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக, ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிதி உதவி வழங்கி வந்தது. கடந்த 2005-2006 நிதியாண்டு முதல் 2011-2012 நிதியாண்டு வரை ரூ.94 கோடியே 6 லட்சத்தை கிரிக்கெட் வாரியம் அளித்தது.

இந்த பணத்தில் ரூ.43 கோடியே 69 லட்சம் கையாடல் நடந்ததாக ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. பின்னர், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி. உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சி.பி.ஐ. வழக்கின் அடிப்படையில், இதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கு தொடர்பாக, பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலத்தை சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டனர்.

இதற்கிடையே, இந்த விசாரணை, பழிவாங்கும் செயல் என்று பரூக் அப்துல்லாவின் மகனும், முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சம்மனுக்கு விளக்கம் அளித்துள்ளோம். குப்கார் தீர்மானத்தையொட்டி காஷ்மீர் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். அதனால் ஏற்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை இது. விசாரணை மட்டுமே நடத்தப்பட்டது. எந்தவிதமான ஆய்வுகளும் நடத்தப்படவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் செய்திகள்