கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றாத ரெயில் பயணிகளுக்கு சிறை, அபராதம்
கொரோனா கால வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றாத ரெயில் பயணிகளுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என ரெயில்வே பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை தடுக்க அமலில் இருந்து வருகிற ஊரடங்குக்கு மத்தியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் வரும் பண்டிகை காலத்தையொட்டி சிறப்பு ரெயில்களை ரெயில்வே துறை இயக்குகிறது. இதற்கான வழிகாட்டும் விதிமுறைகள், ரெயில்வே பாதுகாப்பு படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளன..
இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை விடுத்துள்ள வழிகாட்டும் விதிமுறைகள் வருமாறு:-
* முக கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும், ரெயில்வே பகுதிக்கோ, ரெயில் நிலையத்துக்கோ வந்தோலோ, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அல்லது முடிவு வரவேண்டிய நிலையில் ரெயிலில் ஏறினால், சுகாதார குழுவினர் அனுமதி மறுத்தும் ரெயிலில் ஏறினால் அது குற்றம் ஆகும்.
* எச்சில் துப்புவது, கழிவுகளை போடுவது சட்ட விரோதம்.
* கொரோனா பரவலை தடுப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் வழங்கிய எந்த வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமலிருப்பது, ரெயில்வேயால் அனுமதிக்கப்படாத செயல்களில் அடங்கும்.
* மேற்சொன்ன விதிமீறல்களுக்காக ரெயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 145, 153 மற்றும் 154-ன் கீழ் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
இந்த சட்டத்தின் பிரிவு 145, மது போதை மற்றும் இடையூறு ஏற்படுத்துதல் ஆகியவற்றை கையாள்கிறது. இதற்காக அதிகபட்சமாக ஒரு மாத சிறை தண்டனை, ரூ.250 அபராதம் விதிக்கப்படும்.
* சக பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டால் பிரிவு 154-ன் படி ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இவ்வாறு ரெயில்வே பாதுகாப்பு படை கூறி உள்ளது.