‘370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர தொடர்ந்து போராடுவோம்’ - விடுதலையான மெகபூபா பேச்சு

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர தொடர்ந்து போராடுவோம் என விடுதலையான மெகபூபா முப்தி கூறி உள்ளார்.

Update: 2020-10-14 23:15 GMT
ஸ்ரீநகர், 

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி வந்த இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றி மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

அதைத் தொடர்ந்து அங்கு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கிற விதத்தில் முன்னாள் முதல்-மந்திரிகளான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஏராளமானோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். பல மாதங்களுக்கு பிறகு பரூக் அப்துல்லாவும், உமர் அப்துல்லாவும் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் மெகபூபா காவல் தொடர்ந்தது. இதை எதிர்த்து அவரது மகள் இலிதிஜா முப்தி, சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், மெகபூபா நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார்.

14 மாதங்களுக்கு பிறகு விடுதலையானதை தொடர்ந்து மெகபூபா பேசி 83 வினாடிகள் ஓடக்கூடிய ஆடியோ செய்தி ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி சட்ட விரோதமாகவும், ஜனநாயக விரோதமாகவும், அரசியல் சாசனத்துக்கு எதிராகவும் பறிக்கப்பட்டதை (அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு) நாம் திரும்பப்பெறுவோம் என்பதற்கு உறுதி ஏற்போம். ஆகஸ்டு 5-ந் தேதி மத்திய அரசு எடுத்த முடிவு, பகல் கொள்ளை. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண நாங்கள் உழைப்போம்.

இது எளிதானது அல்ல. இந்த பாதையில் கஷ்டங்கள் இருக்கும். ஆனால் நமது மன உறுதி, இந்த போராட்டத்தில் தொடர்ந்து நமக்கு உதவியாக இருக்கும்.

நான் விடுவிக்கப்பட்டதுபோல, நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைபட்டுள்ள (காஷ்மீர் மக்கள்) அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீநகரில் உள்ள மெகபூபாவின் இல்லத்துக்கு பரூக் அப்துல்லாவும், அவரது மகன் உமர் அப்துல்லாவும் நேற்று சென்று அவரை சந்தித்து பேசினர்.

இது குறித்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்ட உமர் அப்துல்லா அதில், “ தடுப்பு காவலில் இருந்து விடுதலையான நிலையில், மெகபூபாவின் உடல்நிலம் குறித்து விசாரித்து அறிவதற்காக அவரை எனது தந்தையும், நானும் மதியம் சந்தித்து பேசினோம். நாளை (இன்று) குப்கார் பிரகடனம் தொடர்பாக நடத்துகிற கூட்டத்தில் கலந்து கொள்ள அப்பா அழைத்தார். அதை அவர் அன்புடன் ஏற்றுக்கொண்டார்” என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்