சோதனையின்போது ‘நிர்பய்’ ஏவுகணையில் தொழில்நுட்ப கோளாறு டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் ஆய்வு
கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பரிசோதனையில் இருக்கும் இந்த ஏவுகணை, பல சோதனைகளின் போது வெற்றிகரமான முடிவுகளை தந்துள்ளது.;
புதுடெல்லி,
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று நிர்பய். சப்சானிக் ரகத்தை சேர்ந்த நவீன ஏவுகணையான இது, 1000 கி.மீ. வரை சென்று எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பரிசோதனையில் இருக்கும் இந்த ஏவுகணை, பல சோதனைகளின் போது வெற்றிகரமான முடிவுகளை தந்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் டி.ஆர்.டி.ஓ., அந்த வரிசையில் நேற்று இந்த நிர்பய் ஏவுகணையையும் சோதிக்க தயாரானது.
இதற்காக ஒடிசாவின் பாலாசோரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் காலை 10.30 மணிக்கு இந்த ஏவுகணையை டி.ஆர்.டி.ஒ. அதிகாரிகள் சோதித்தனர். அப்போது ஏவுகணையில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏவுகணை சோதனையை டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் கைவிட்டனர்.
பின்னர் ஏவுகணையில் ஏற்பட்டுள்ள கோளாறு குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், அதை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். பரிசோதனை நேரத்தில் நிர்பய் ஏவுகணையில் கோளாறு ஏற்பட்டது, டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.