ஆள்இல்லா விமானம் மூலம் துல்லியமாக கணக்கெடுப்பு 3 ஆண்டுகளில் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு கிராமப்புற மக்களுக்கு சொத்துவிவர அட்டை புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
கிராமப்புற மக்களுக்கு ‘சொத்து விவர அட்டை’ வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் அனைவருக்கும் இந்த அட்டைகள் வழங்கப்படும்.
புதுடெல்லி,
கிராமப்புற மக்களில் பலருக்கு வீடுகள், நிலங்கள் உள்ளிட்ட சொத்துகள் இருந்த போதிலும், அவற்றுக் கான பட்டா போன்ற சட்டப்பூர்வ ஆவணங் கள் இல்லை.
அதனால், சொத்துகளின் பெயரில் அவர்களுக்கு வங்கி கடன் கிடைப்பது இல்லை. மேலும், சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாததால், நிலத்தகராறுகளையும் அவர்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது.
இத்தகைய பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, கிராமப்புறங்களில் சொத்து வைத்திருப்பவர்களுக்கு சொத்து விவர அட்டை (பட்டா) வழங்கும் ‘ஸ்வமிட்வா’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். சில பயனாளிகளுடன் அவர் உரையாடினார்.
நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்த திட்டம், கிராமப்புறங்களை முற்றிலும் மாற்றி அமைக்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டம். உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு பேர்தான், தங்களுக்கு சொந்தமான சொத்துகளுக்கு சட்டரீதியான ஆவணம் வைத்திருக்கிறார்கள்.
இனிமேல், இந்த சொத்து விவர அட்டையை பயன்படுத்தி, கிராமப்புற மக்கள் வங்கிகளில் கடன் பெறலாம். அவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுக்க முடியாது. இதைக் காட்டி, இதர பணப்பலன்களையும் பெற முடியும்.
கிராமப்புற இளைஞர்கள் வங்கி கடன் பெற்று சொந்த தொழில் தொடங்கலாம். அதன்மூலம் அவர்கள் தன்னம்பிக்கையை பெறுவதுடன், சுயசார்பு நிலையை அடையலாம்.
‘தற்சார்பு இந்தியா’ என்ற நிலையை அடைய நாம் இலக்கு நிர்ணயித்துள்ளோம். அந்த இலக்கை அடையும்பயணத்துக்கு இந்த திட்டம் மிகப்பெரிய நடவடிக்கை ஆகும். இந்தியா போன்ற வளரும் நாடுகள், நிலவுடைமை ஆவணங்கள் வைத்திருப்பது அவசியம்.
அடுத்து வரும் மூன்று, நான்கு ஆண்டுகளுக்குள், மீதி உள்ள 6 லட்சம் கிராமங்களில் அனைத்து குடும்பங்களுக்கும் சொத்து விவர அட்டை வழங்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும்.
சுதந்திர போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் நானாஜி தேஷ்முக் ஆகியோரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கிராம மக்கள், பிரச்சினையில் சிக்கும்போது தங்களையும் வளர்த்துக்கொள்ள முடியாமல், சமூகத்தையும் வளர்க்க முடியாமல் திண்டாடுவார்கள் என்று நானாஜி தேஷ்முக் கூறினார்.
கிராமங்களில் நிலப்பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நிலவுடைமை ஆவணங்கள் வழிகோலும். ‘ஸ்வமிட்வா’ திட்டம், கிராமப்புற நிர்வாகத்தை எளிமையாக்க உதவும்.
‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்தி, கிராமங்களில் நிலங்களை அளவிட்டு, நில ஆவணங்களை துல்லியமாக உருவாக்கப்படும். இந்த ஆவணங்கள் மூலம் கிராமம் தொடர்பான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும்.
எனவே, இந்தியா வளர்ச்சி அடைவதற்கு இதுபோன்ற நிலவுடைமை ஆவணங்கள் அவசியம். அதற்கு இத்திட்டம் பயன்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முதல் கட்டமாக, உத்தரபிரதேசம், அரியானா, மராட்டியம், மத்தியபிரதேசம், உத்தரகாண்ட், கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் 763 கிராமங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு சொத்து விவர அட்டை வழங்கப்படுகிறது.
அவர்கள், செல்போனில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் இணைப்பை பயன்படுத்தி சொத்து விவர அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். அத்துடன், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், அவர்களுக்கு நேரில் அட்டை வழங்கும்.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:-
இந்த அரசு, பாரபட்சமின்றி, முழு வெளிப்படைத்தன்மையுடன் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலன்களை ஒவ்வொருவரும் பெற்று வருகிறார்கள்.
கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள், கிராமப்புற மக்களுக்கு செய்ததை விட எனது 6 ஆண்டுகால ஆட்சியில் நிறைய செய்யப்பட்டுள்ளது.
வங்கி கணக்கில் நேரடியாக பணம் அனுப்புவது, வீடுகள், கழிப்பறைகள் கட்டுவது, குடிநீர், மின்இணைப்பு, சமையல் கியாஸ் இணைப்பு வழங்குவது போன்ற பணிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், இடைத்தரகர்கள், கமிஷன் ஏஜெண்டுகள் ஆகியோரின் ஆதரவுடன் அரசியல் செய்தவர்கள், இந்த அரசின் வேளாண் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து பொய்களை பரப்பி வருகிறார்கள். அதற்காக சீர்திருத்த நடவடிக்கைகளை நிறுத்த போவதில்லை.
முன்பு ஆட்சியில் இருந்தவர்கள், கிராமப்புற மக்கள், தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும்படி விட்டு விட்டார்கள். கிராம மக்கள் தற்சார்பு நிலையை அடைவதை அவர்கள் விரும்பவில்லை.
கிராம மக்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக பணம் அனுப்பியதால், தாங்கள் சட்டவிரோதமாக ஈட்டி வந்த வருவாய் பாதிக்கப்பட்டதாக அவர்கள் கருதினர்.
அதனால்தான், சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்க்கிறார்கள். அவற்றை விவசாயிகள் எதிர்க்கவில்லை. வஞ்சக வலையை நாட்டு மக்கள் அறுத்தெறிய தொடங்கிவிட்டனர்.
நாட்டை கொள்ளையடித்தவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டு விட்டனர். அதனால்தான், எதிர்க்கட்சிகள் அநாகரிக வார்த்தைகளால் அரசை விமர்சிக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சி பயணத்தை நிறுத்தப்பார்க்கிறார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.