தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொள்கை மீறப்பட்டுள்ளது - மத்திய மந்திரிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம்
தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொள்கை மீறப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.;
சென்னை,
தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பில் சட்டப்படிப்புக்கும், சட்டமேற்படிப்புக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படாமல் இடஒதுக்கீட்டு கொள்கை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீடு சட்டம் 2006-ன்படி மாணவர்களுக்கான சேர்க்கையிலும், ஆசிரியர்களின் வேலைவாய்ப்பிலும் அனைத்து பல்கலைக்கழகங்களும் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளையை 13 தேசிய சட்டப்பல்கலைக்கழகங்கள் அனைத்தும் முற்றிலுமாக மீறியுள்ளன. தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் இயற்றப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மீறும் தேசிய சட்டப்பல்கலைக்கழகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எச்சரித்துள்ளது.
மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் உடனடியாக தலையிட்டு, மத்திய கல்வி நிறுவனங்களில் இந்த கல்வியாண்டிலேயே (2020-21) இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்ட ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.