கேரள தங்க கடத்தல் விவகாரம் ஸ்வப்னா சுரேஷ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு சுங்கத்துறை நடவடிக்கை
ஸ்வப்னா சுரேஷ் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;
கொச்சி,
கேரளா தலைநகர் திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையத்தில் கடந்த ஜூலை 5-ந் தேதி ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்டதை, சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), சுங்கத் துறை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரள அரசின் தகவல்தொழில்நுட்பத் துறை பிரிவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்வப்னா சுரேஷ், திரிசூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சுங்கத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும், தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் ஸ்வப்னா சுரேஷ் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அவரை கைது செய்ய சுங்கத்துறை பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
ஒருவர் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் பட்சத்தில் அவரை விசாரணை இன்றி ஒரு ஆண்டு வரை தடுப்புக் காவலில் வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.